சுவிஸ்லாந்தில்‌ செழிப்பான வாழ்வளிக்கும்‌ செங்காலன்‌ கதிர்வேவலாயுதன்‌!

சுவிஸ்லாந்தில்‌ செழிப்பான வாழ்வளிக்கும்‌ செங்காலன்‌ கதிர்வேவலாயுதன்‌!

நங்‌ கடம்பனைப்‌ பெற்றவள்‌ பங்கினன்‌,
தென்‌ கடம்பனைத்‌ திருக்கரக்‌ கோயிலான்‌,
தன்‌ கடன்‌ அடியேனையும்‌,தாங்குதல்‌,
என்‌ கடன்‌ பணி செய்து கிடப்பதே

கதிர்வேலே மூலவராக விளங்கும்‌ ஆலயம்‌

– சுவிற்சர்லாந்து நாட்டில்‌ அமைந்த குமரன்‌ கோயில்‌.
– ஆல்ப்ஸ்‌ மலைக்கும்‌, ரைன்‌ நதிக்கும்‌ இடையே அமைந்த திருக்கோயில்‌.
– முருகனைத்‌ தேடி வெள்ளை மயில்‌ வந்து திருவிளையாடல்‌ புரிந்த தலம்‌.

– ஆன்மிகப்பணியோடு, சமுதாயப்‌ பணியையும்‌, இணைந்து செய்யும்‌ பொது நலக்கோயில்‌.

-அனைத்துலக முருக பக்தி மாநாட்டை நடத்தி தமிழ்த்‌ தொண்டு புரிந்த ஆலயம்‌.

– சித்திரத்தேர்‌ கொண்ட ஆலயம்‌ – சுவிஸ்‌ நாட்டு மக்களின்‌ மனம்‌ கவர்ந்த கோயில்‌ என பல்வேறு பெருமைகள்‌ கொண்ட ஆலயமாகத்‌ திகழ்வது,

செங்காலன்‌ மாநிலத்தில்‌ அமைந்துள்ள சென்மார்க்கிறெத்தன்‌ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில்‌.உலகத்தின்சொர்க்க பூமிஎன்றால்‌ நம்‌ நினைவிற்கு வருவது, சுவிட்சற்லாந்து நாடு. பசுமை போர்த்திய மலைகளும்‌, பனிகள்‌ மூடிய மலைகளும்‌, ஜீவநதிகளும்‌ பாயந்தோடும்‌ பூண்ணிய பூமி இது. உலகிலேயே மதநல்லிணக்கத்திற்குஎடுத்துக்காட்டாக விளங்கும்‌ நாடு இதுவே குன்றிருக்கும்‌ இடமெல்லாம்‌ குமரன்‌ இருக்கும்‌ இடம்‌ என்பதை சுவிற்சர்லாந்து நாட்டிலும்‌ நிரூபித்திருக்கிறார்‌, முருகப்பெருமான்‌. ஆல்ப்ஸ்‌ மலையடிவாரத்தில்‌ ஜீவநதியான ரைன்‌ நதிக்‌ கரையோரம்‌ எழுந்தருளியுள்ளார்‌, ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி. சுவிற்சர்லாந்து மற்றும்‌ ஆஸ்திரியா நாட்டின்‌ எல்லையோர மாநிலமாக விளங்குவது, செங்காலன்‌. இதில்‌ சென்மார்க்கிறேத்தன்‌ கிராமத்தில்‌ அமைந்துள்ளது. ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம்‌. வேலும்‌, மயிலும்‌ பிரதானமாக விளங்கும்‌ ஆலயம்‌ இது. இது தவிர, இவ்வாலயம்‌ பல்வேறு சிறப்புக்களையும்‌ தன்னகத்தே கொண்டூ விளங்குகின்றது

தலவரலாறு:

சுவிஸ்‌ நாட்டில்‌ உள்ள சென்மார்க்கிறெத்தன்‌ பகுதி வாழ்‌ தமிழர்கள்‌ தங்கள்‌ பகுதிக்கு முருகன்‌ ஆலயம்‌ ஒன்று அமைக்க வேண்டும்‌ என்ற ஆர்வம்‌ இருந்து
வந்தது. இதன்காரணமாக 2005 ஆம்‌ ஆண்டில்‌, முருகனின்‌ அருளாலும்‌, தமிழர்‌ நற்பணி மன்றத்தாலும்‌ அவர்களின்விருப்பம்‌ நிறைவேறியது. சிறிய ஆலயமாக தொடங்கப்பட்ட, இவ்வாலயத்தில்‌ சைவ, ஆகமப்படி பூஜைகள்‌ நடந்து வந்தன. எளிமையாக தொடங்கப்பட்ட இந்த ஆலயம்‌, தனிப்பெரும்‌ ஆலயமாக உருவாக்கப்‌ பெற்று, 2007ஆம்‌ ஆண்டில்‌ குடமுழுக்குவிழா நடைபெற்றது. இதன்‌ பின்‌ இப்பகுதியில்‌ தமிழர்கள்‌ பங்களிப்பும்‌ அதிகமாகி வர, பக்தர்களின்‌ வருகையும்‌ கூடத்தொடங்கியது.  இங்கு வரும்‌ பக்தர்களின்‌ வேண்டுதல்களை கதிர்வேலாயுதசுவாமி நிறைவேற்றித்தர, பக்தர்கள்‌ வருகையும்‌ அதிகரித்தவண்ணம்‌ உள்ளது. அயல்நாட்டினரும்‌ இவ்வாலயத்தை வியப்புடன்‌ தரிசித்துச்‌ செல்கின்றனர்‌.

ஆலய அமைப்பு:

இவ்வாலயம்‌ சென்மார்க்கிறேத்தன்‌ என்ற கிராமத்தில்‌, தொழிற்சாலைப்‌ பகுதியில்‌ பிரம்மாண்ட பலமாடிகள்‌ கொண்ட தனிக்கட்டிடத்தில்‌ அமைந்துள்ளது. இக்கோயில்‌, அயல்நாட்டில்‌ அமைந்துள்ளதால்‌, அந்நாட்டு கட்டிட பாணியில்‌ அமைந்துவிட்டது போலும்‌. எளிய நுழைவு வாயில்‌, நுழைந்ததும்‌, சில படிகள்‌ ஏறினால்‌ ஆலயம்‌ நம்மை வரவேற்கிறது.

வேல்கள்‌ தாங்கிய கதவுகள்‌ வழியே உள்ளே நுழைந்ததும்‌, விநாயகப்‌ பெருமான்‌ காட்சி தருகின்றார்‌.  அருகே எளிய கொடிமரம்‌, மயில்‌ மூலவரை தரிசித்த
வண்ணம்‌ காட்சி தருகின்றன. மூலவராக முருகப்பெருமானின்‌ கதிர்வேல்‌ அழகுற அலங்கரிக்கப்பட்டு நமக்கு அருள்காட்சி தருகின்றது.  இடது பின்புறம்‌
விஷ்ணு, துர்க்கை அழகுற காட்சிதருகின்றனர்‌. எதிரில்‌ சண்டிகேசுவரர்‌, வைரவர்‌ காட்சி தருகின்றனர்‌. அருகே அலங்கார மண்டபத்தில்‌ விநாயகர்‌, வள்ளி
தெய்வானை சமேத முருகப்பெருமான்‌ என அனைத்துவித உற்சவ மூர்த்திகளும்‌ அழகுற வடிவமைக்கப்பட்டு, காட்சி தருகின்றனர்‌.

மூலவர்‌ மற்றும்‌ உற்சவமூர்த்திகள்‌ அனைத்துமே ஐம்பொன்‌ சிலைகளால்‌ அமைந்துள்ளது தனிச்‌ சிறப்பு அம்சமாகும்‌.

கதிர்வேலே மூலவர்‌:

முருகப்‌ பெருமானின்‌ திருக்கோயில்களில்‌ வேலுக்கும்‌ முக்கியப்‌ பங்குண்டு. வேல்‌ வடிவமே முருகனின்‌ அருவுருவத்‌ திருக்கோலம்‌ ஆகும்‌. இந்தத்‌ தத்துவத்தின்‌அடிப்படையில்‌ இவ்வாலயத்தின்‌ குறிப்பிடத்தக்க அம்சம்‌, மூலவராக விளங்கும்‌ முருகப்பெருமானின்‌ வேலாயுதம்‌. இந்த வேலினை மையமாக வைத்தே ஆலயம்‌ அமைக்கப்பட்டுள்ளது.

அலங்கரிக்கப்பட்ட பிறகு, இதை நோக்கினால்‌ முருகப்பெருமானே நேரில்‌ காட்சி தருவது போலத்‌ தோன்றுகிறது.

தாமாக வந்த வெள்ளை மயில்‌ :

கதிர்வேலாயுத சுவாமி ஆலயப்‌ பகுதிக்கு கடந்த 2010 ஆம்‌ ஆண்டு நவம்பர்‌ மாதம்‌ ஞாயிறன்று கந்த சஷ்டி விரத காலத்தின்போது, இறெயின்தாளர்‌ தமிழ்‌
இளைஞர்கள்‌ விளையாட்டு மைதானத்தில்‌ விளையாடிக்கொண்டிருந்தனர்‌. அப்போது ஒரு வெள்ளை நிற மயில்‌ ஒன்று தாமாகப்‌ பறந்து அப்பகுதிக்கு வந்து
சேர்ந்தது. அங்கே மைதானத்தில்‌ விளையாடிக்‌ கொண்டிருந்த தமிழ்‌ இளைஞர்களுக்கு இது வியப்பாக இருந்தது.  உடனே அருகில்‌ இருந்த ஆலய
நிர்வாகி திருவாளர்‌ வேலுப்பிள்ளை கணேசகுமார்‌ அவர்களிடம்‌ இத்‌தகவலைக்‌ கூறினர்‌.

அந்நாட்டு வனவிலங்கு சட்டப்படி உடனே அவரும்‌ இதனைக்‌ காவல்‌ துறைக்குத்‌ தெரிவித்தார்‌. அத்தோடு தங்கள்‌ ஆலய தெய்வமான முருகனைப்‌ பெருமானைப்‌ பற்றியும்‌, முருகனின்‌ வாகனம்‌ மயில்‌ என்பதையும்‌ எடுத்துக்‌ கூறினார்‌. அதனால்‌ அவரின்‌ கருத்தை ஏற்றுக்கொண்டனர்‌. எவராவது உரிமை கோரினால்‌ திரும்பத்‌ தந்துவிட வேண்டும்‌ என்ற நிபந்தனையின்‌ பேரில்‌, ஆலயத்தின்‌ வசம்‌ வெள்ளை மயிலை காவல்துறையினர்‌ அவரிடம்‌ ஒப்படைத்தனர்‌.  ஆண்டுகள்‌ பல கடந்தும்‌,  இன்றுவரை எவரும்‌ அந்த வெள்ளை மயிலை உரிமை கோரவில்லை. அபூர்வ பறவையான வெள்ளை மயில்‌ கந்தர்‌ சஷ்டி நாளன்று முருகன்‌ ஆலயம்‌ தேடி பறந்து வந்த நிகழ்வு அப்பகுதி வாழ்‌ மக்களாலும்‌, பக்தர்களாலும்‌ இன்றும்‌ வியப்பான செய்தியாகப்‌ பேசப்படுகின்றது.

அனைத்துலக முருகபக்தி மாநாடு 2014

மலேசியா நாட்டு திருவாக்கு திருபீடத்தின்‌ ஏற்பாட்டில்‌,  இவ்வாலயம்‌, அனைத்துலக முருகபக்தி மாநாட்டினை சுவிற்சர்லாந்து நாட்டில்‌ வெகு சிறப்பாக நடத்திக்‌ காட்டியது. இதில்‌ உலகம்‌ தழுவிய இம்மாநாட்டில இலங்கை, இந்தியா, மலேசியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும்‌ ஐரோப்பிய நாடுகளைச்‌ சார்ந்த இருநூறுக்கும்‌ மேற்பட்ட அறிஞர்‌ பெருமக்கள்‌ பங்கேற்றனர்‌. மூன்று நாட்கள்‌ வெகு விமர்சையாக நடந்து முடிந்த இம்மாநாடு இவ்வாலயத்திற்கு கூடுதல்‌ பெருமை சேர்த்தது. இதன்‌ மூலம்‌ இவ்வாலயம்‌ உலக, அரங்கில்‌ சாதனைபுரிந்தது. இம்மாநாட்டில்‌, விழா மலரும்‌, முருகனைப்‌ பற்றிய 175 ஆய்வுக்கட்டுரைகளும்‌ வெளியிடப்பட்டன.

இவ்வாலயத்திற்கு வருகை தந்த சமயப்பெரியோர்கள்‌:

இந்தியா, இலங்கை மற்றும்‌ புலம்பெயர்‌ நாடுகளின்‌ ஆதீனங்கள்‌, சுவாமிகள்‌, சமயப்‌ பெரியோர்கள்‌ , புகழ்‌ பெற்ற இயல்‌, இசை, நாடகக்‌, கலைஞர்கள்‌ எனப்‌ பலரும்‌ வருகை தந்து சிறப்பு செய்துள்ளனர்‌.

மலேசிய திருவாக்கு திருபீடம்‌ பாலயோகி சுவாமிகள்‌, வாழுங்கலை ஸ்ரீ ரவிசங்கர்‌, நல்லை ஆதீனம்‌ ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய
சுவாமிகள்‌, இன்றைய பேரூர்‌ ஆதீனம்‌ அருள்திரு சாந்தலிங்க சுவாமிகள்‌, கெளமார மட ஆதீனம்‌ அருள்திரு குமரகுருபர சுவாமிகள்‌, பழனி ஆதீனம்‌, கேரளா
முரளி கிருஷ்ண சரவணபாபா சுவாமிகள்‌, தலாய்லாமா சீடர்கள்‌ என, என்னற்ற ஆன்மிப்பெரியவர்கள்‌ இவ்வாலயம்‌ வந்து கதிர்வேலனின்‌ அருள்பெற்றுள்ளனர்‌.

இளைஞர்களிடம்‌ சமய பற்று:

இவ்வாலயம்‌ வழிபாடுகள்‌,விழாக்கள்‌ என்ற அளவில்‌ நின்று விடாமல்‌, சிறுவர்கள்‌, இளைஞர்களை நெறிப்படுத்தி, அவர்களுக்கு தேவாரம்‌, பண்ணிசை, சமய, வழிபாடுகளை கற்பித்து, பசுமரத்தாணியாக நல்லொழுக்கத்தை வளரச்செய்து, அவர்களை நல்வழியில்‌ வாழ தயார்‌ செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன்‌ சுவிஸ்‌ நாட்டில்‌ வாழும்‌ பல்வேறு கல்வி நிறுவனங்களின்‌ மாணவர்களுக்கும்‌ நம்‌ சமயத்தின்‌, பெருமைகள்‌ குறித்த விளக்கங்களை தந்து நம்‌ பெருமைகளை உணர வழிவகுக்கின்றது.

கல்வி,சமுதாயச்‌ சேவையில்‌ ஆலயம்‌:

இவ்வாலயம்‌ சுவிற்சர்லாந்து நாட்டில்‌ வாழும்‌ தமிழ்‌ மக்களிடம்‌ சமயத்தையும்‌, ஆன்மிகத்தையும்‌ வளர்த்து மக்களை நெறிப்படுத்துகின்றது. அத்துடன்‌ தங்கள்‌
தாய்நாட்டில்‌ வாழும்‌ ஆதரவற்ற சிறுவர்கள்‌, போரினால்‌ பாதிக்கப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கும்‌ தங்களால்‌ இயன்ற உதவிகளைச்‌ செய்து வருகிறது.
இதுமட்டுமின்றி, சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில்‌ ஏற்பட்ட வர்தா புயல்‌ பெரு வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்ட மக்களுக்குக்‌ கூட இவ்வாலயம்‌ உதவிகள்‌ செய்தது குறிப்பிடத்தக்கது. இது தவிர, கல்வி, வளர்ச்சி, கோதானம்‌, சுயதொழில்‌ வேலைவாய்ப்பு, செயற்கை உறுப்புகள்‌ பொருத்த உதவி, ஆதரவற்றோருக்கு
வாழ்வாதார உதவிகள்‌, கலைஞர்கள்‌, ஆன்றோர்களை வரவழைத்து கெளரவித்தல்‌, புகழ்பெற்ற பாடகர்களை வைத்து திருப்புகழ்‌ உள்ளிட்ட பக்திப்பாடல்‌ இசைத்தட்டுகள்‌, சைவ போற்றும்‌ நூல்கள்‌ வெளியிடுதல்‌ போன்றவற்றையும்‌ சிறப்பாக செய்து வருகின்றது. மேலும்‌, இந்து சமயத்தில்‌ ஈடுபாடுகொண்ட சுவிஸ்‌ நாட்டில்‌ வாழும்‌ தமிழர்கள்‌ மற்றும்‌ நம்‌ கலாச்சாரத்தை”விரும்பி வருகின்ற வெள்ளையர்களுக்கும்‌ திருமண வைபவங்கள்‌ நடத்தி வைக்கப்படுகின்றன.

விழாக்கள்‌:

ஆண்டுதோறும்‌ வைகாசி விசாக பட்சத்தை அடிப்படையாகக்‌ கொண்டு பன்னிரண்டு நாள்கள்‌ பிரம்மோற்சவமும்‌ வீதியுலாவும்‌ நடைபெறுகிறது. விழாவில்‌ முக்கிய அம்சமாக தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதற்கென 2017ஆம்‌, ஆண்டில்‌, மரத்திலான பெரிய சித்திரத்தேர்‌ இலங்கையில்‌ இருந்து தருவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில்‌ காவடி எடுத்தல்‌, பால்‌ குடம்‌, தீச்சட்டி, அலகு குத்துதல்‌ என பக்தர்கள்தங்கள்‌ வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்‌. இவ்விழாவில்‌ ஆயிரக்‌ கணக்கில்‌ பக்தர்கள்‌ ஒன்று கூடுவது குறிப்பிடத்தக்கது. இது தவிர, தினமும்‌ பூசைகளும்‌ நடைபெறுகின்றன.
2015 ஆம்‌ ஆண்டு கொடியேற்றத்திருவிழாவிற்குப்‌ பிறகு தினமும்‌ மாலை நேரத்தில்பூசைகள்‌ நடத்தப்படுகின்றன. இதில்‌ பக்தர்கள்‌ பலரும்‌ கலந்து கொள்கின்றனர்‌. இது தவிர,வெள்ளிக்கிழமைகளில்‌ விசேட பூசைகள்‌, கூட்டுப்‌ பிராரத்தனைகளும்‌ நடைபெறுகின்றன.

விசேட உற்சவங்களாக, தைப்பூசம்‌, தைப்பொங்கல்‌, மாசிமகம்‌, மகாசிவராத்திரி, கேதார கெளரி விரதம்‌, ஐப்பசி வெள்ளி, தீபாவளி, கந்தசஷ்டி, சர்வாலய தீபம்‌, பிள்ளையார்‌ கதை,திருவெம்பாவை, ஆகிய விசேட உற்சவங்களும்‌ நடைபெறுகின்றன.

மாகோற்சவம்‌ எனப்படும்‌ வருடாந்திர உற்சவம்‌ வைகாசி மாதத்தில்‌ பத்து நாட்கள்‌ பிராமாண்டமாக நடத்தப்படுகின்றது. ஜோதி ரூபக்காட்சித்திருவிழா, கப்பல்‌
திருவிழா, மாம்பழத்திருவிழா, வேட்டைத்திருவிழா, சப்பரத்திருவிழா, தேர்த்திருவிழா, தீரகத்திருவிழா, திருக்கல்யாணத்திருவிழா என பத்து தினங்களுமே
சிறப்புடன் நடத்தப்படுகின்றன. இவ்விழாக்காலங்களில்‌, விசேட சமய சொற்பொழிவுகள்‌, இசைக்கலைஞர்களின்‌ மேளக்கச்சேரிகளும்‌ நடத்தப்படுகின்றன.

தேர்த்திருவிழா அன்று,பக்தர்கள்‌ வேல்குத்தி காவடி எடுத்தல்‌,கற்பூரச்சட்டி தூக்குதல்‌, பால்‌, குடம்‌ எடுத்தல்‌, என பல்வேறு நேர்த்திக்‌ கடன்களை செலுத்துகின்றனர்‌. ஆண்டுதோறும்‌ கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. இதில்‌ முருகபக்தர்கள்‌ விரதமிருந்து வழிபடுகின்றனர்‌.

தரிசன நேரம்‌:

இவ்வாலயம்‌ நாள்தோறும்‌ மாலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00ணி வரையிலும்‌, சிறப்பு நாட்களில்‌ பிற்பகல்‌ 2.00 மணி முதல்‌ இரவு 10.00 மணி வரையிலும்‌ திறந்திருக்கும்‌.

நிர்வாகம்‌:

இவ்வாலயத்தினை பரிபாலன சபை நிர்வாகம்‌ சிறப்பாக நிர்வாகம்‌ செய்து வருகின்றது. இதன்‌ அறக்கட்டளைச்சபை தலைவராக, திரு.வேலுப்பிள்ளை
கணேசகுமார்‌ பணியாற்றி வருகின்றார்‌. இதன்‌, செயலாளராக திரு.இராமநாதபிள்ளை ஸ்ரீதரன்‌, பொருளாளராக திரு.சதாசிவம்‌ அற்புதராசா, செயற்குழு உறுப்பினர்களாக திருவாளர்கள்‌ மகாலிங்கசிவம்‌ , தர்மபாலன்‌, கஜேந்திரன்‌, சிவகுருநாதன்‌, சண்முகராசா, குணாளன்‌ ஜோதினி ஆகியோர்‌ இடம்‌ பெற்றுள்ளனர்‌.

அமைவிடம்‌:

சுவிற்சலாந்து நாட்டின்‌ கிழக்கு மாநிலம்‌ செங்காலன்‌. இதன்‌ முக்கிய ஊராகத்‌ திகழ்வது சென்மார்க்றேத்தன்‌.ஆல்ப்ஸ்‌ மலைக்கும்‌, ரைன்‌ நதிக்கும்‌ இடைப்பட்ட
பகுதியில்‌ இயற்கை எழில்‌ வாய்ந்த ஊரில்‌ அமைந்துள்ளது இத்திருக்கோயில்‌ . ஜுரிச்‌- ஆஸ்திரியா ரயில்‌ வழித்தடத்தில்‌ , ஜுரிச்சில்‌ மாநகரில்‌ இருந்து 110 கி.மீ. தொலைவிலும்‌, செங்காலன்‌ மாநகரில்‌ இருந்து 25 கி.மீ. தொலைவிலும்‌ இத்தலம்‌அமைந்துள்ளது. அல்ரன்றைன்‌ என்ற உள்நாட்டு விமான நிலையம்‌ 9 கி.மீ தொலைவில்‌அமைந்துள்ளது. ஆஸ்திரியா எல்லை 200 மீட்டர்‌ தூரத்திலும்‌, ஜெர்மனி எல்லையில்‌ இருந்து 30 கி.மீ தொலைவிலும்‌ அமைந்துள்ளது.

சுவிஸ்‌ நாட்டுக்குச்‌ செல்லும்‌ வாய்ப்புள்ளவர்கள்‌ தரிசிக்க வேண்டிய முருகன்‌ திருக்கோயில்‌ இது என்றால்‌ அது மிகையல்ல.

இனி ஆலயத்தின்‌ வளர்ச்சியில்‌ முக்கிய நிகழ்வுகளை, பார்க்கலாம்‌.

  • 2005 ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதம்‌ 5ஆம்‌ தேதியன்று தமிழர்‌ நற்பணி மன்றத்தால்‌ கதிர்வேலாயுதன்‌ ஆலயம்‌ அங்குரார்ப்பணம்‌ செய்யப்பட்டது.
  • 2007 ஆம்‌ ஆண்டு கும்பாபிஷேகம்‌ நடைபெற்றது.
  • 2008இல்‌ அலங்காரத்திருவிழா தொடங்கியது.
  • 2010 இல்‌ கந்த சஷ்டி விழாவின்போது, வெள்ளைமயில்‌ இவ்வாலயம்‌ வந்தது.
  • 2014 இல்‌ அனைத்துலக முருகபக்தி மாநாடு நடைபெற்றது.
  • 2015 ஆம்‌ ஆண்டு கொடியேற்றப்பட்டு, மகோற்சவம்‌ நடைபெற்றது.
  • 2017ஆம்‌ ஆண்டு சித்திரத்தேர்‌ இலங்கையில்‌ தயாரிக்கப்பட்டு சுவிஸ்‌ நாட்டிற்கு வந்து சேர்ந்தது.
  • 2020 ஆம்‌ ஆண்டில்‌ கடந்த ஜனவரி மாதம்‌ 31ஆம்‌, தேதியன்று பாலஸ்தானம்‌ செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து,வரும்‌ ஆகஸ் மாதம்‌ 31 ஆம்‌ தேதி,ஆவணித்திங்கள்‌ 15 ஆம்‌ நாள்‌, திங்கட்கிழமையன்று, வளர்பிறை,சதுர்த்தி,திருவோண நட்சத்திரம்‌, அமிர்த
யோகம்‌ கூடிய நன்னாளில்‌ இரண்டாவது முறையாக, மீண்டும்‌ கும்பாபிஷேகம்‌ நடத்தப்படுகின்றது.

இதில்‌,சிவலிங்கம்‌,அம்பாள்‌,மகாலட்சுமி, ஸ்ரீசக்கரம்‌ (மாமேரு) உள்ளிட்ட புதிய மூர்த்தங்களும்‌ நிறுவப்படஉள்ளன. இவ்விழா, இலங்கை, இந்தியா, மற்றும்‌  ஐரோப்பிய நாட்டு குருமார்களால்‌ நடத்தப்பட உள்ளது. இதனைத்தொடர்ந்து, மண்டலாபிஷேகத்தினை 48 நாட்கள்‌ நடத்தவும்‌ ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இரண்டடு கால பூஜைகளை தொடர்ந்து நடத்தவும்‌ முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொண்டடுகள்‌,சேவைகள்‌:

இவ்வாலயம்‌ பக்தி உணர்வை வளர்ப்பதோடடு, கல்வி வளர்ச்சி, கோதானம்‌, சுயதொழில்‌ வேலைவாய்ப்பு, செயற்கை உறுப்புகள்‌ பொறுத்த உதவி, ஆதரவற்றோருக்கு வாழ்வாதார உதவிகள்‌, கலைஞர்கள்‌, ஆன்றோர்களை வரவழைத்து கெளரவித்தல்‌. புகழ்பெற்ற பாடகர்களை வைத்து திருப்புகழ்‌ உள்ளிட்ட பக்திப்பாடல்‌ இசைத்தட்டுகள்‌, சைவ போற்றும்‌ நூல்கள்‌ வெளியிடுதல்‌ என நற்பணிகள்‌ நீண்டுகொண்டே செல்கின்றது.

நிறைவுரை:

செங்காலன்‌ மாநில கதிர்வேலாயுத சுவாமி பெரிய நிலப்பரப்பில்‌ நிலையான ஆலயமாக உருவாக்கும்‌ முயற்சியில்‌ நிர்வாகம்‌ இறங்கியுள்ளது. இத்தலத்து
முருகனின்‌அருளாற்றல்‌ செங்காலன்‌ மாநிலத்தைக்‌ கடந்து, ஐரோப்பா கண்டத்தின்‌ பல்வேறு நாடுகளுக்கும்‌ பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்காக அர்ப்பணிப்பு உணர்வுடன்‌ செயல்பட்டுவரும்‌ திரு. வேலுப்பிள்ளை கணேசகுமார்‌ ஒருங்கிணைப்பில்‌ நிர்வாகிகள்‌ அனைவரும்‌,ஒன்றுபட்டு உழைத்து
வருவதும்‌, இம்மாநில மக்களின்‌, ஒத்துழைப்புமே, முக்கியக்‌ காரணம்‌ என்பதும்‌ குறிப்பிடத்தக்கது.

வந்த வினையும்‌ வருகின்ற வல்வினையும்‌,
கந்தனென்று சொல்லக்‌ கலங்கிடூமே
செந்தில்‌, நகரச்‌ சேவகா என்று திருநீறு அணிவோருக்கு,
மேவ வாராதே வினை!
செங்காலன்‌ கதிர்வேலா போற்றி!போற்றி!!

சுபம்‌